பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி மூடல்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் ஒரு பகுதி மூடப்பட்டு உள்ளது. அங்கு புதிதாக மேற்கூரை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-29 19:00 GMT

பொள்ளாச்சி


பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் ஒரு பகுதி மூடப்பட்டு உள்ளது. அங்கு புதிதாக மேற்கூரை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய பஸ் நிலையம்

பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும், பொள்ளாச்சியை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தாராபுரம், நெகமம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதியில் பஸ் நிலையத்தின் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

மாணவி காயம்

இதன் காரணமாக அடிக்கடி கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவி ஜனனி காயமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

இதில் மேற்கூரை கான்கிரீட் மற்றும் தூண்கள் வலுவிழந்தும், கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதும் தெரிய வந்தது. உடனே கான்கிரீட் பெயர்ந்து விழும் பகுதியை சுற்றியும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இதை அறியாமல் பயணிகள் சிலர் உள்ளே சென்று உட்கார்ந்து இருந்தனர்.

இருக்கைகள் இல்லை

அவர்களிடம் போலீசார், நகராட்சி அதிகாரிகள் கட்டிடம் மோசமாக உள்ளதாக கூறி வெளியே அனுப்பினர்.

இதனால் நெகமம், பெதப்பம்பட்டி, தாராபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் உட்காருவதற்கு இருக்கை இல்லாமல் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி பழைய பஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதனால் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்குவதால் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது.

இதனால் ஆபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேற்கூரை

மேலும் பயணிகள் உள்ளே செல்வதை தடுக்க தடுப்புகள் வைக் கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, ஏற்கனவே மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளது போன்று நகராட்சி பொது நிதி மூலம் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்