நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என போச்சம்பள்ளியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-09-17 19:45 GMT

போச்சம்பள்ளி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என போச்சம்பள்ளியில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பிரேமலதா

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிக்கு நேற்று வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை முதன்முதலில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது தே.மு.தி.க. தான். கேரளாவில் இருந்து ஒருபிடி மணல் கூட அள்ள முடியாது. தமிழகத்தில் கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் கனிமவள கொள்ளை அதிக அளவில் நடக்கிறது.

இப்படியாக கனிமவள கொள்ளையில் ஈடுபடும் நபர்கள்மீது அமலாக்கத்துறை நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதை பழக்கம்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை 2½ ஆண்டுகள் கழித்து நிறைவேற்றி இருக்கிறது. அனைவருக்கும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியான நபர்களுக்கு என்று கூறுகின்றனர். எனவே அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களை நிறுவி வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் வேலை இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுவால் மக்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய அபாயமானது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நிச்சயம் பலன் அளிக்காது. அதாவது மேற்குவங்காளம் போன்ற வெளிமாநிலங்களில் 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியப்படும். இந்தியா முழுவதுமாக ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நிச்சயம் வாய்ப்பு குறைவுதான்.

அதற்கான வாய்ப்புகளும் இல்லை. விரைவில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். தே.மு.தி.க. தொண்டர்கள் தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்