தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும் - திருமாவளவன்
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகள் எல்லாவற்றையும் பா.ஜ.க. அரசு அகற்றியுள்ளது. அவற்றை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து காட்சிப் பொருளாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த எதேச்சதிகார நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். அவற்றை பழைய இடங்களிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை 1967-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அன்றைய ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 3.66 மீட்டர் உயரம் உள்ள அந்த வெண்கலச் சிலை புகழ் பெற்ற சிற்பி வி.வி.பாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மெமோரியல் கமிட்டியினால்' நன்கொடையாக வழங்கப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 4.9 மீட்டர் உயரம் கொண்ட வெண்கல சிலை சிற்பி ராம் வி. சுதார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1993-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த இரண்டு சிலைகளும் இந்த தலைவர்களின் உருவ சிலைகளாக மட்டுமின்றி அவர்களது கொள்கைகளின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன. நாடாளுமன்றத்துக்குள் ஜனநாயக முறையிலான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் அந்தச் சிலைகளின் முன்னால் கூடுவதையே அரசியல் கட்சியினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் நாடாளுமன்றத்துக்குள் இருக்கும் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை அழகு படுத்துவதாக சொல்லிக் கொண்டு இந்த சிலைகளையெல்லாம் எவருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக மோடி அரசு அகற்றியுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்வதற்காகப் போகும்போதுதான் இந்த உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்குள் ஜனாதிபதியும், பிரதமரும் நுழைவதற்குத் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் போகும் வழியில் தான் இந்த சிலைகள் உள்ளன. அவர்களது வாகனங்கள் வளைந்து செல்ல வேண்டி இருக்கிறது என்பதுதான் இந்த சிலைகள் அகற்றப்படுவதற்கு உண்மையான காரணமாகும். அதுமட்டுமின்றி தேசத் தந்தை காந்தியின் கொள்கைகளும், அரசியலமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கரின் கொள்கைகளும் பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தடைக் கற்களாக உள்ளன. எனவே, அவர்களது உருவ சிலைகளைப் பார்ப்பது பிரதமர் மோடிக்குப் பிடிக்காத ஒன்றாகத்தான் இருக்கும். அங்கே ஒவ்வொரு சிலையும் நிறுவப்பட்டதன் பின்னே சிறப்பான ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாற்று நினைவுகளை அழிக்க வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் நோக்கமாகும்.
தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் நாடாளுமன்ற செயலகத்திலிருந்து விளக்கம் ஒன்று தரப்பட்டிருக்கிறது. "நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க வரும் பார்வையாளர்கள் அங்கே இருக்கும் சிலைகள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் அவற்றை வசதியாகப் பார்க்க முடியவில்லை. எனவே, அந்தச் சிலைகளையெல்லாம் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி பார்வையாளர்கள் எளிதாக பார்ப்பதற்கு வசதி செய்து தருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு சிலைகளை மாற்றி அமைப்பது சபாநாயகர் எடுத்த முடிவு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் நிர்வாகம் சபாநாயகர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த சிலைகளை அகற்றுகிற முடிவை தன்னிச்சையாக அவர் எடுத்தது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதுமட்டுமின்றித் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக, அவசர அவசரமாக சிலைகளை அகற்றியிருப்பது அவர்களின் உள்நோக்கத்தைத்தான் காட்டுகிறது. புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், பழைய சபாநாயகர் இத்தகைய முடிவை எடுப்பதற்கு அதிகாரம் உண்டா என்பது கேள்விக்குரியதாகும். தேர்தலில் பெரும்பான்மையைத் தராமல் சரியான பாடத்தைப் புகட்டினாலும் பா.ஜ.க.வினர் தம்முடைய பாசிச நடவடிக்கையை நிறுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
காந்தியடிகளையும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் அவமதிக்கிற இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் ஆதரிக்கிறார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும். கோடிக்கணக்கான மக்களின் வணக்கத்துக்குரிய தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும். தேசத் தந்தை காந்தியடிகளின் சிலையும், அரசியலமைப்புச் சட்டத் தந்தை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையும் முன்பு இருந்த அதே இடங்களில் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.