திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில்பாரி வேட்டை திருவிழா பாதியில் நிறுத்தம்

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமியை தூக்கிசெல்வதில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையால் பாரிவேட்டை திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-10-06 18:45 GMT

ரிஷிவந்தியம்

அரங்கநாதபெருமாள் கோவில்

மணலூர்பேட்டை அருகே உள்ள திருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி 10-ம் நாள் அன்று சாமி குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்கு சென்று அம்பு எய்யும் நிகழ்ச்சியும், குதிரை வாகனத்தில் உற்சவர் அரங்கநாதர் வீதி உலா நடைபெறுவதும் வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழாவின் 10-வது நாளான நேற்று முன் தினம் இரவு சாமி வீதி உலாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. இதில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் உற்சவர் அரங்கநாதர் வில், அம்புடன் எழுந்தருளினார்.

இரு தரப்பினரிடயே பிரச்சினை

பின்னர் வீதி உலா புறப்பட தயாரான நிலையில் சாமியை தூக்கி செல்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே திடீர் பிரச்சினை ஏற்பட்டது. அதாவது அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களை கொண்டு சாமி வீதி உலா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு சாமியை தூக்கி சென்று கொண்டிருந்த ஒரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுடன் தாங்கள்தான் சாமியை தூக்கி செல்வோம் என்றனர். அப்போது ஊர்மக்கள் தாங்தான் சாமியை தூக்கி செல்வோம் என்று அவர்களும் போர்க்கொடி பிடித்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்கள் இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து நாங்கள் இரு தரப்பினரும் சேர்ந்து சாமியை தூக்கி செல்வோம் வேறு யாரும் தூக்க கூடாது என்றனர்.

வீதி உலா ரத்து

ஆனால் அறநிலையத்துறை மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தான் சாமியை தூக்கி செல்ல வேண்டும் என அதிகாரிகள் உறுதியாக தெரிவித்தனர். இதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து அம்பு எய்தல் நிகழ்ச்சி மற்றும் சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக அசம்பாவிதங்களை தடுக்க திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்