மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள்

கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து மாணவர்களை அவர்களது பெற்றோர்கள், பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி சென்றனர்.

Update: 2023-04-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 7-ந் தேதி மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமலும், கோவிலுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவரை தாக்கியதாகவும் கூறி, ஒரு தரப்பு மக்கள் அன்று இரவு சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல்பாதி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, 8-ந் தேதியன்று விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினரும் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, தங்கள் கிராம மக்களிடம் கலந்தாலோசித்து 2 நாட்களுக்கு பிறகு வந்து கருத்தை தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர். இதனால் அக்கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

இந்நிலையில் நேற்று காலை ஒரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்குள்ள அரசு பள்ளிக்கு அனுப்பாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சீருடையுடன் பள்ளிக்கு புறப்பட இருந்த மாணவ- மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் செய்வதறியாது தங்கள் பகுதியில் உள்ள கோவிலின் முன்பு அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் விரைந்து சென்று மாணவ- மாணவிகளின் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவில்லை. இதையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் வேல்முருகன் ஆகியோர் அக்கிராமத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதுகாப்புடன் பள்ளி சென்றனர்

அப்போது தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் கல்வி நலன் முக்கியம் என்று அவர்களது பெற்றோர்களிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினர். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உரிய பாதுகாப்பு வசதி செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதித்தனர். அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன், அம்மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து கிராம பிரச்சினை சுமூகமாக தீர, இரு தரப்பினரும் விரைந்து வந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அறிவுறுத்திச்சென்றார். இதனிடையே கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்