ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல்
செங்கம் அருகே ஆதிதிராவிட நடுநிலை பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்்.
செங்கம்
செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உட்பட பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர வழங்கப்படவில்லை என்றும், போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடிப்படை வசதிகள் மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து இன்று மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியின் கேட்டை மூடி பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.