காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் எலி மருந்தை தின்ற பிளஸ்-2 மாணவி

எலி மருந்தை தின்ற காதல் ஜோடிக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2024-04-03 11:15 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் தந்தை, சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

மாயமான மாணவியும், அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதான வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 25-ந் தேதி திருச்சிக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள், நேற்று முன்தினம் தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கு வந்து எலி மருந்தை தின்று விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளனர். நேற்று காலை இருவரும் தங்களது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து தின்ற விவரத்தை தெரிவித்து விட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனுடன் பிளஸ்-2 மாணவி எலி மருந்தை தின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்