மதுரையில் பயங்கரம்: வீடு புகுந்து கொத்தனார் கொலை- ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைது

ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து கொத்தனார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-23 20:54 GMT


ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வீடு புகுந்து கொத்தனார் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ நிறுத்துவதில் தகராறு

மதுரை பி.பி.குளம் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 61). கொத்தனார். இவரது மனைவி சிவகாமி. இவரது வீட்டின் அருகே குடியிருந்து வருபவர் வடிவேல் (43). ஆட்டோ டிரைவர். தினமும் இவர் மாலையில் வேலை முடிந்து வீட்டின் அருகே குடிநீர் குழாயை ஒட்டி ஆட்டோவை நிறுத்தி வந்தார். அதில் அடிக்கடி குடிநீர் குழாய் சேதம் அடைந்ததால் ஆட்டோவை சற்று தள்ளி நிறுத்துமாறு மோகன் மனைவி கூறியுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இதே போன்று வடிவேல் ஆட்டோவை நிறுத்தும் போது மோகன் மனைவி தட்டி கேட்டுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த அவர் அவரை தாக்கியுள்ளார். தனது மனைவியை தாக்கியது குறித்து அறிந்த மோகன் அவரை சத்தம் போட்டுள்ளார்.

வீடு புகுந்து தாக்கியதில் இறப்பு

அப்போது அங்கு வந்த வடிவேலின் மனைவி விஜி கணவருக்கு ஆதரவாக பேசினார். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்குள் சென்ற மோகனை அவர்கள் துரத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே மோகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவர், மனைவியுடன் கைது

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகனை கொலை செய்ததாக ஆட்டோ டிரைவர் வடிவேல், அவரது மனைவி விஜி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்