ஓவேலியில் பரபரப்பு:வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

ஓவேலியில் நள்ளிரவு தொழிலாளி வீட்டை காட்டு யானைகள் சூறையாடியது. அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-07-06 19:30 GMT

கூடலூர்

ஓவேலியில் நள்ளிரவு தொழிலாளி வீட்டை காட்டு யானைகள் சூறையாடியது. அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

முற்றுகையிட்ட காட்டு யானைகள்

கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாரம் பகுதியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இந்த நிலையில் பார்வுட் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அசீஸ் என்பவரது வீட்டை காட்டு யானை ஒன்று உடைத்து அனைத்து பொருட்களையும் சேதப் படுத்தியது. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த அசீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இந்த சமயத்தில் மின்சாரமும் தடைபட்டது. இதனால் இருளில் இருந்த ஆசிஸ் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் ஜாபர் மற்றும் சிலர் ஓடி வந்தனர். மேலும் மின்சாரம் இல்லாததாலும் எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாலும் காட்டு யானைகள் நிற்பது தெரியாமல் சத்தம் போட்டவாறு இருந்தனர். இதைத் தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது.

பின்னர் அசீஸ் குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டனர். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ஓவேலி வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதிர்குமார் ஆகியோர் கூறியதாவது:- சம்பந்தப்பட்ட தொழிலாளி வீட்டில் பலாப்பழங்கள் வைத்துள்ளனர். அதன் வாசனையை முகர்ந்தபடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளது.

இதனால் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் எஸ்டேட் நிர்வாகமும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்