ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள் மும்முரம்
கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
புதிய கட்டிடம்
கோத்தகிரி காந்தி மைதானத்திற்கு அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 11 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால், கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து மழைக்காலங்களில் ஒழுகி வந்தது. இதனால் அங்கு அலுவலர்கள் சிரமத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் நிதி திட்டத்தின் கீழ் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 தளத்துடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக, ரூ.3 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
80 சதவீதம் நிறைவு
தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கின. தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக ஊராட்சி மன்ற பொதுக்கூட்ட அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.
இதுவரை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் புதிய அலுவலகத்தின் கட்டுமான பணி நிறைவடைந்து, புதிய கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட தொடங்கும் என்றனர்.