மின்னல் தாக்கியதில் ஏரியில் மூழ்கி ஊராட்சி செயலாளரின் மகன் பலி

மின்னல் தாக்கியதில் ஏரியில் மூழ்கி ஊராட்சி செயலாளரின் மகன் இறந்தார்.;

Update:2022-08-27 00:49 IST

குன்னம்:

மின்னல் தாக்கியது

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சி மன்ற செயலாளராக உள்ளார். இவரது மகன் ரஞ்சித்குமார்(வயது 21). அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21). நேற்று மாலை ரஞ்சித்குமாரும், மேகநாதனும் எழுமூர் ரோட்டில் அசூர் கிராமத்திற்கும், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையே உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர்.

அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன் பிடித்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் நின்ற 2 ேபர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் காயமடைந்த மேகநாதன், ரஞ்சித்குமாரை கரைக்கு இழுத்துக்கொண்டு கரைக்கு வர முயன்றுள்ளார். ஆனால் அவரை இழுத்து கரை ஏற்ற முடியாததால், மேகநாதன் தட்டுத்தடுமாறி கரை ஏறி ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார்.

பிணமாக மீட்பு

இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களுடன், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏரியில் இறங்கி ரஞ்சித்குமாரை தேடினர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் ரஞ்சித்குமாரை ஏரியில் இருந்து பிணமாக மீட்டனர். அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மேகநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் ரஞ்சித்குமார் ஏரியில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்