ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பிய ஊராட்சி செயலாளர் ஏரிக்கரையோரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2023-02-24 18:45 GMT

கள்ளக்குறிச்சி

ஊராட்சி செயலாளர்

கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது 44). சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த. இவர் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர் களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் கூட்டம் முடிந்தும் அங்கிருந்து திரும்பிய ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ஏரிக்கரை அருகே உள்ள பிடாரியம்மன் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் கீழே கிடந்த துணியை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விரைந்தனர்

அவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து ஜெயவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜெயவேல் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பணிச்சுமை காரணமா?

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பிய ஜெயவேல் ஏரிக்கையோரம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊராட்சி செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறுவாங்கூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்