"தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள்" அழைப்பிதழில் 900 குடும்பங்களின் பெயர்களை அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்
அழைப்பிதழில் ஊராட்சிக்கு உட்பட்ட 900 குடும்பங்களை சேர்ந்த தலைவர், தலைவி பெயர்களை தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்து உள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மல்லபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் (வயது 53) உள்ளார். இரண்டாவது முறையாக சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த ஊராட்சியில் மல்லபுரம், கச்சுக்கட்டு, திருமலைராஜபுரம், வில்வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 900 குடும்பங்கள் உள்ளன.
இந்நிலையில் இவரது மகள் ஷாலினி-கைலாசுக்கு இன்று கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு மாதமாக திருமண அழைப்பிதழை உற்றார் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று ரமேஷ் கொடுத்து வந்தார். ஆனால் அவர் கொடுத்த அழைப்பிதழ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது மட்டுமின்றி நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த அழைப்பிதழில் ஊராட்சிக்கு உட்பட்ட 900 குடும்பங்களை சேர்ந்த தலைவர், தலைவி பெயர்களை தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்து உள்ளார். இதனை பார்த்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டதுடன் உறவினர்களே அழைப்பிதழ்களில் பெயர் போட யோசிக்கும் இந்த காலத்தில் ஜாதி, மதம் என எந்தவித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது மகள் திருமண விழாவில் அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர் ரமேசை வெகுவாக பாராட்டினர்.மேலும் பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் கூறும்போது:-
எனது ஊராட்சிக்குட்பட்ட அனைவரின் குடும்பமும் எனக்கு ஒன்று தான். அனைவரையும் எனது குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன். எனது மகளை அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும். எப்போதும் போல் எனது சேவை தொடரும் என்றார்.