திருவாலங்காடு அருகே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் என்.என். கண்டிகை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்டவேண்டும். ஆனால் என்.என்.கண்டிகையில் உள்ள ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள முக்கிய ஆவணங்கள் நனைந்து சேதமானதையோட்டி அந்த அலுவலகத்தை பயன்படுத்தாமல் விட்டதால் பாழடைந்து காணப்படுகிறது. தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி அலுவலக கட்டிட வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஊராட்சி அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம் என்.என். கண்டிகை கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.