பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
பணகுடி ஆலந்துறையாறு கால்வாய் ரூ.35 கோடியில் சீரமைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
பணகுடி:
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆலந்துறையாற்றில் இருந்து சூறாவளி அணைக்கட்டு வரை செல்லும் கால்வாய் பராமரிப்பு இன்றி தூர்ந்தும், அங்குள்ள சாலை சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் 52 குளங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பாசன வசதி தடைபட்டு உள்ளது. இதையடுத்து பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் கன்னிமாரன்தோப்பு, சூறாவளியூற்று உள்ளிட்ட பகுதிகளில் சபாநாயகர் அப்பாவு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியில் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சிபாறையில் உள்ள ஆலந்துறை ஆற்றில் அணை கட்டப்பட்டு, அங்கிருந்து சூறாவளி அணைக்கட்டு வரை கால்வாய் அமைக்கப்பட்டது. பின்னர் அந்த கால்வாய் பராமரிப்பின்றி சேதமடைந்து தூர்ந்து கிடப்பதால் மழைக்காலங்களில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
எனவே சேதமடைந்த கால்வாயை தூர்வாரி அகலப்படுத்தவும், கஞ்சிபாறை அணையில் கூடுதலாக தண்ணீரை சேமிக்கும் வகையில் அணையை உயர்த்தவும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆலந்துறையாறு கால்வாய் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சகாயபுஷ்பராஜ், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.