பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு

பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், அதன் நடுவே அமையும் தூக்குப்பாலம் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரி கூறினார்.

Update: 2023-08-05 18:45 GMT

ராமேசுவரம், 

பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு கூடுதலாக ரூ.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும், அதன் நடுவே அமையும் தூக்குப்பாலம் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அதிகாரி கூறினார்.

பாம்பன் ரெயில் பாலம்

பாம்பன் கடலில் தற்போதுள்ள ரெயில் பாலம் 105 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டது. இதனால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் வடக்கு கடல் பகுதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன

333 தூண்கள்

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் கடலில் 2.2 கிலோமீட்டர் நீளத்தில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி வேகமாகவே நடைபெற்று வருகிறது. கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த தூண்கள் மீது 100 கர்டர்கள் இடம்பெறும். இதில் ஒவ்வொரு கர்டரும் சுமார் 20 மீட்டர் நீளமும் 28 டன் எடையும் கொண்டதாகும்.

மண்டபம் நுழைவுப்பகுதியில் இருந்து மையப்பகுதி வரையிலும் தூண்கள் மீது இரும்பு கர்டர் பொருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. அதுபோல் பாம்பன் பகுதியில் இருந்து மையப் பகுதியில் வரையிலும் கர்டர் பொருத்தம் பணியானது, தூக்குப்பாலம் அமைந்த பின்னர்தான் தொடங்கப்படும்.

கூடுதலாக ரூ.85 கோடி நிதி

மையப்பகுதியில் அமைய உள்ள செங்குத்து வடிவிலான தூக்குப் பாலம் சுமார் 70 மீட்டர் நீளமும், 520 டன் எடையும் கொண்டதாகும். புதிய ரெயில் பாலத்திற்காக மேலும் ரூ.85 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு மொத்தம் ரூ.535 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகின்றது.

தூக்குப்பாலத்திற்கான உபகரணங்கள் அனைத்தும் சத்திரக்குடியில் இருந்து தயார் செய்து பாம்பன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து அதை செங்குத்து வடிவிலான தூக்குபாலமாக ஒன்றிணைத்து வடிவமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது.

அனைத்து பாகங்களையும் வெல்டிங் செய்து ஒன்றிணைக்கும் பணி இந்த மாத இறுதியுடன் முடிவடையும்.

இந்த பணி முடிவடைந்த பின்னர் அடுத்த மாதம் புதிய தூக்கு பாலமானது நகரும் கிரேன் மூலம் மையப்பகுதிக்கு கொண்டு வரப்படும்.

பிப்ரவரியில் முடியும்

பின்னர் மோட்டார் பொருத்தி திறந்து மூடுவதற்கான பணிகள் நடைபெறும். மழை சீசனுக்கு முன்னதாக மையப்பகுதிக்கு தூக்குப்பாலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைய ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை ஆக வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு மற்றும் ரெயில்வே துறையும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதற்கேற்றபடி பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசியாவிலேயே கடலுக்குள் செங்குத்து வடிவிலான திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் கட்டப்படுவது பாம்பனில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்