பழனி முருகன் கோவில் அறிவிப்பு பதாகை அகற்றப்பட்ட விவகாரம்: தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகையை ஏற்கனவே இருந்த அதே இடத்தில் வைக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 1947 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி சட்டம் இந்து அல்லாத எந்த சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது.
அதேபோல் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் மற்ற மதத்தை நம்புகிறவர்களும் இந்து கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் என்னவென்றும் இந்த சட்டம் கூறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்து சமய சட்டம் 1947 விதி எண் 48-ன் படி இந்து அல்லாதவர் இந்து கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஆணை தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன்? அகற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பியதுடன் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.