பொருளாதார நெருக்கடி; "டீ" குடிப்பதை குறைக்குமாறு மக்களுக்கு பாகிஸ்தான் கோரிக்கை

20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், உலகில் அதிக அளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகிறது.

Update: 2022-06-15 10:07 GMT

Photo Credit: AFP

இஸ்லமாபாத்,

இலங்கையை போல பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்வதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரி அஷன் இக்பால் கூறும் போது, " பாகிஸ்தான் மக்கள் ஒரு நாளைக்கு ஓன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் அருந்த வேண்டும். கடனை பெற்றே நாங்கள் தேயிலையை இறக்குமதி செய்கின்றோம். மின்சாரத்தை சேமிப்பதற்காக வணிக நிறுவனங்கள் முன்னதாகவே தங்கள் செயற்பாடுகளை முடித்துக்கொள்ளவேண்டும்" என்றார்.

20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், உலகில் அதிக அளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகிறது. 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் 640 மில்லியன் டாலர் மதிப்பில் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்