பல்லாவரத்தில் தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை நண்பர் கைது
பல்லாவரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.;
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (வயது 29). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சின்னதுரை தனியாக வாழ்ந்து வந்தார்.
தினமும் பகலில் வேலைக்கு செல்லும் சின்னதுரை, இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம். அப்போது இவருக்கும், அதே இடத்தில் படுத்து தூங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
தலையில் கல்லைப்போட்டு கொலை.
நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா, நண்பர் சின்னதுரையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதற்காக சின்னதுரை தூங்கும் வரை காத்திருந்தார். அதன்படி நள்ளிரவில் அவர் தூங்கியதும், ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சின்னதுரையின் தலையில் போட்டார். இதில் சின்னதுரை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நண்பர் கைது
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சின்னதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கொலையான சின்னதுரை உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.