சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிலாரி மோதி பெயிண்டர் பலி
சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியானார்.
சிதம்பரம்,
மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
சிதம்பரம் வடக்கு வடுகத்தெரு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தில்லைகோவிந்தன் மகன் மதியழகன்(வயது 24). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களான அதே தெருவை சேர்ந்த பிரவீன்குமார், மணிகண்டன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரி சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மதியழகன் ஓட்டினார்.
சிதம்பரம் புறவழிச்சாலை தனியார் கார் ஷோரூம் அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரியும், மதியழகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் மதியழகன் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
2 பேருக்கு தீவிர சிகிச்சை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீன்குமார், மணிகண்டனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.