பாதை பிரச்சினையில் பெயிண்டர் வெட்டிக்கொலை

பூதப்பாண்டி அருகே பாதை பிரச்சினையில் பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த விவசாயி அரிவாளுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2023-08-22 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே பாதை பிரச்சினையில் பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த விவசாயி அரிவாளுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

பாதை பிரச்சினை

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு நம்பியான்குளம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது50), பெயிண்டர். இவருக்கு ஜான்சி (37) என்ற மனைவியும், செல்வின் (8) என்ற மகனும், அல்வியா (6) என்ற மகளும் உள்ளனர். ஜான்சி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். குழந்தைகள் இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3 மற்றும் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

அதே பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு (43), விவசாயி. இவருடைய சகோதரியின் வீடு, நெல்சனின் வீட்டின் அருகே உள்ளது. ரிச்சர்டின் சகோதரிக்கும் நெல்சனுக்கும் இடையே பாதை பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெல்சன் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த பிரச்சினையில் ரிச்சர்டு தனது சகோதரிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனால் நெல்சன், ரிச்சர்டை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தைகளால் பேசுவார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

திருமணத்துக்கு சென்றவர்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நாவல்காடு பகுதியில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள ரிச்சர்டு மோட்டார் சைக்கிளில் தனது 2 குழந்தைகளுடன் சென்றார். பின்னர் இரவு 8.30 மணியளவில் குழந்தைகளுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது நம்பியான்குளம் பகுதியில் நெல்சன் நின்று கொண்டிருந்தார்.

அவர் ரிச்சர்டை கண்டதும் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது ரிச்சர்டு அவரிடம் பதிலுக்கு வாக்குவாதம் செய்த நிலையில் குழந்தைகளுடன் வீட்டுக்கு சென்றார்.

அரிவாளால் வெட்டிக் கொலை

பின்னர் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து அரிவாளை எடுத்து கொண்டு மீண்டும் நம்பியான்குளம் பகுதிக்கு வந்தார்.

அங்கு நெல்சன் நின்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ரிச்சர்டு தான் கொண்டு வந்த அரிவாளால் நெல்சனை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது ஒரு கை துண்டானது. மேலும் உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில் நெல்சன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் நிலையத்தில் சரண்

இதையடுத்து ரிச்சர்டு ரத்தம் படிந்த அரிவாளுடன் நேராக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். அவர் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதை தகராறில் பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்