மாடி படியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு
அரக்கோணம் அருகே மாடி படியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 4 அடுக்கு மாடி வீட்டில் பெயிண்டு அடிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் துருவை கிராமத்தை சேர்ந்த 3 பேர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தனஞ்செழியன் (வயது 51) என்பவர் தூங்குவதற்காக மொட்டை மாடிக்கு கைப்பிடி இல்லாத படியில் ஏறியபோது 3-வது மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார், தனஞ்செழியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.