என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது - திமுக எம்.பி., திருச்சி சிவா

என் வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி., திருச்சி சிவா கூறியுள்ளார்.

Update: 2023-03-16 07:01 GMT

சென்னை,

திருச்சி மாநகராட்சி எஸ்.பி.ஐ. காலனியில் திமுக எம்.பி. திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா நடைபெற்றது.

இந்த திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனர்களில், திருச்சி சிவா எம்.பி. பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து விட்டு அமைச்சர் கேஎன் நேரு காரில் திரும்ப சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென காரில் இருந்து இறங்கி சிவா எம்.பி. வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்த முகப்பு மின் விளக்குகளை அடித்து நொறுக்கினர். மேலும், திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக்கை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை திருச்சி சிவா இன்று பார்வையிட்டார். பின்னர், திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நடந்த செய்திகளை நான் ஊடங்கள் வாயிலாகவும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.

என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை.

தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது.

வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மன நிலையில் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்