7 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம்

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 7 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2022-07-19 22:54 IST


சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு 7 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பாரம்பரிய நெல்

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 100 ஹெக்டேர் அளவில் பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வட்டாரத்திலும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பயிர், பரப்பு விரிவாக்கம் செய்யும் பொருட்டு, 7 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை வினியோகம் செய்ய இந்த வருடம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தூயமல்லி, சீரகசம்பா, மாப்பிள்ளைசம்பா, கருப்புகவுனி, ஆத்தூர் கிச்சிலி சம்பா, சிவப்பு கவுணி, பூங்கார் ஆகிய பாரம்பரிய ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது.

எனவே சம்பா பருவத்தில் 7 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் விழுப்புரம், விருதுநகர், திருவாரூர், சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு விதைப்பண்ணைகளிலிருந்து நமது மாவட்டத்திற்கு வரப்பெற்றவுடன் இளையான்குடி உள்பட விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்திடும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

பயனடையலாம்

மேலும் நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக 15 ரூபாய் மானியத்தில் ஒரு விவசாயிக்கு 10 கிலோ அளவில் வினியோகம் செய்யப்படும். பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. உடலிற்கு வலிமை சேர்க்கும். தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு பயனடையலாம். பாரம்பரிய நெல் விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்