புங்கனூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

Update:2022-06-28 01:52 IST

புங்கனூர் பகுதியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவில் சொத்துகள்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளித்தனர். இதில் இந்து பாதுகாப்பு இயக்கம் மாவட்ட செயலாளர் சேகர் கொடுத்த மனுவில், திருச்சி கீழக்குறிச்சி காவேரி அம்மன் வகையரா கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் சுமார் ஆயிரத்து 570 ஏக்கர் உள்ளன. இதில் குத்தகைக்கு விடப்பட்ட அந்த நிலத்தை குத்தகைதாரரர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில்களின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியினர் கொடுத்த மனுவில், நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி செய்த நிலப்பரப்புகள் முழுமையாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆகையால் புங்கனூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

திருச்சி நாம் தமிழர் கட்சி மாநகர் மாவட்ட மகளிர் பாசறை இணைச் செயலாளர் கிரிசா கொடுத்த மனுவில், திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விரிவாக்க பணிக்காக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 416 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்