நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.;
ஏர்வாடி:
திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் தலைமை தாங்கினார். திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவி இசக்கித்தாய் ஞானசேகர் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ பெரிய ரக நெல் ரூ.2,115-க்கும், சிறிய ரக நெல் 2,160-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அத்துடன் அரசின் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில், பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அறுவடை நேரத்திலும் மழை பெய்கிறது. எனவே 20 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும்" என்றார்.