கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-09 18:45 GMT


திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

சம்பா சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழைக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் தெளித்து பராமரித்து வந்தனர்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்ந்து தற்போது அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்தது. அதில் 54 ஆயிரம் எக்டேரில் அறுவடை செய்யப்பட்டது.

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு

கடந்த வாரம் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 23 ஆயிரத்து 200 எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உளுந்து 20 ஆயிரத்து 80 எக்டேரும், கடலை 1,225 எக்டேரும், எள் 41 எக்டேர், பருத்தி 23 எக்டேர் பாதிப்படைந்துள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தலைமையில் வேளாண் அதிகாரிகள் அந்தந்த சரக பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.

நிவாரணம் அறிவிப்பு

அதைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை அமைச்சர் தலைமையில் ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர்

அதன்பேரில் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் யூனுஸ், பிரபாகரன், போயா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா அரிச்சபுரம், ரிஷியூர், மன்னார்குடி தாலுகாவில் துண்டகட்டளை, திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கீரக்கலூர், திருவாரூர் தாலுகாவில் கோமல் ஆகிய பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். இதில் நெல்லின் ஈரப்பதம் குறித்து கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

அறிக்கை சமர்பிக்கப்பட்டு நடவடிக்கை

மேலும் அந்த பகுதிகளில் வயல்களில் இறங்கி நெற்பயிர்களின் நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, தாசில்தார்கள் மலர்கொடி, ஜீவானந்தம், நக்கீரன், பரஞ்சோதி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டுள்ளனர். ஆய்வுக்கு பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்