மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை பக்தர் சாவு
தட்டப்பாறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதயாத்திரை பக்தர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை தேவர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் பொன்பாண்டி பிரபு (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 10 பேருடன் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு கேம்ப் தட்டப்பாறை அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பொன்பாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பொன்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செட்டியூரணியை சேர்ந்த வேலாயுதம் மகன் சொரிமுத்து (52) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.