அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றிய 3 வாகனங்கள் பறிமுதல்

மதுரை மண்டல சிறப்புக்குழுவினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றி வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-05-03 20:15 GMT

நாகர்கோவில், 

மதுரை மண்டல சிறப்புக்குழுவினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக கனிமங்களை ஏற்றி வந்த 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அளவுக்கு அதிகமாக கனிமங்கள்

குமரி மாவட்டத்தின் எல்லையோர மாவட்டங்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவோ, அனுமதி இல்லாமலோ எம்.சாண்ட், ஜல்லி, கற்கள் போன்ற கனிமங்கள் கொண்டுவருவதை கண்காணிக்க ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, படந்தாலுமூடு, அஞ்சுகிராமம் உள்ளிட்ட 20 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடிகள் வழியாக கனிமங்கள் கொண்டு வருகின்ற வாகனங்களை சோதனை செய்வதற்கு கனிமவள மண்டல துணை இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் அடங்கிய (மதுரை மண்டல பறக்கும் படை) சிறப்புக்குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அதிக பாரம் ஏற்றிய 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 9 வாகனங்களுக்கு ரூ.5.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், வடசேரி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனிமங்கள் எடுத்துச்சென்ற 6 வாகனங்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்யப்பட்டதில், 3 வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்கள் எடுத்துச்சென்றது கண்டறியப்பட்டது.

சிறப்புக்குழு கூடுதலாக அமைப்பு

எனவே அந்த 3 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வாகன உரிமையாளர்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்வதற்காக தோவாளையில் உள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

எல்லையோர மாவட்டங்களிலிருந்து அனுமதியின்றியோ அதிக பாரத்துடன் கனிமங்கள் கொண்டு செல்கின்ற வாகனங்களை தொடர்ந்து சோதனை செய்து கண்காணிக்கும் பொருட்டு, தனி தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வருவாய் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்