'எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது' - செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள், ஒருபோதும் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள காந்தி, காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செய்தார். பின்னர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறிய தாவது:-
"தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, நூறு ஆண்டுகள் கண்டிராத பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் மக்களை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் இப்போது வாக்கு சேகரிக்க வருகிறார். இதனை தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தமிழகத்தில் ஒருபோதும் மோடியின் சித்து விளையாட்டுகள் எடுபடாது.
அவர் மக்களை ஏமாற்றுவதற்குதான் தற்போது தொடர்ந்து தமிழகம் வருகிறார். வெள்ள நிவாரணத்தின்போது மக்களுக்கு தி.மு.க அரசு எதையும் செய்யவில்லை என்று மோடி கூறி உள்ளார். அப்படியானால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தது யார்?
பாரதிய ஜனதா அரசு தான் எதையும் செய்யவில்லை. ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. ஆனால் நிவாரண நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஒருபோதும் மோடியை அனுமதிக்க மாட்டார்கள்.
எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா முழுவதும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிலும் கையெழுத்தாகும். கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளர்களாக கருதி வேலை செய்வோம்.
தி.மு.க.வை அழித்தே தீருவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்று மண்ணில் இல்லை."
இவ்வாறு அவர் கூறினார்.