பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். அணிக்கு இடமில்லை?
தமிழகத்தில் பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பா.ஜ.க கூட்டணியில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் பா.ஜ.க தடுமாறி வந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் 3 தொகுதிகள் வரை கேட்டதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், தொகுதி பங்கீடு முடிவதில் தாமதம் ஆனது.
இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால், பா.ஜ.க கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கும் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
பா.ஜ.க: 20
பா.ம.க.:10
தமிழ் மாநில காங்கிரஸ்; 3
அமமுக: 2
ஐ.ஜே.கே.: 1
புதியநீதிக்கட்சி; 1
இந்திய மக்கள் முன்னேற்ற கழகம்: 1
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்; 1
39 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதன்படி பார்த்தால் பா.ஜ.க கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பா.ஜ.க கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஓபிஎஸ் அளிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தனது நிலைப்பாடு குறித்து அப்போது விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.