எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மீண்டும் கடிதம்
எதிர்க்கட்சி துணைத் தலைவரை உடனே மாற்றுங்கள் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூடி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்தனர். அதன்படி உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவருக்கு சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுவில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் மு.அப்பாவுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி இருந்தார்.
அ.தி.மு.க. கட்சித் தலைமைப் பதவி குறித்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை மாற்றக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதங்களை ஆய்வு செய்து வருவதாக சபாநாயகர் கூறியிருக்கிறார். இந்த நிலையில் 17-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. எனவே தனது கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.