கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு; காங்கிரசார் கருப்புக்கொடி போராட்டம்

நெல்லையில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-18 20:58 GMT

நெல்லை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நெல்லைக்கு வந்தார். அவரது வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக மொட்டை மாடியில் கருப்புக்கொடியை கட்டினார்கள். மேலும் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில், கட்சியினர் கருப்புக்கொடியை ஏந்திக் கொண்டு அமலாக்கத்துறை மூலம் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் பிரதிநிதியான கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை திரும்ப செல்லுமாறும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் 4 பேர் பலியானது தொடர்பாக கவர்னரிடம் மனு கொடுக்கப்பதற்காக நேற்று மதியம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மனுவுடன் வந்திருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் தலைமையில் போலீசார் முத்துவளவனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்த மனுவை வாங்கி கலெக்டர் மூலம் கவர்னருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். மேலும் கவர்னர் நெல்லையில் இருந்து செல்லும் வரை முத்துவளவனை அங்குள்ள டீக்கடை பகுதியில் கைது செய்து வைத்திருந்தனர். கவர்னர் சென்ற பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்