பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு8 கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-05 18:45 GMT


விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ.6 ஆயிரத்து 431 கோடி செலவில் நடைபெறும், இப்பணியானது தற்போது தீவிரமாகவும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 4 வழிச்சாலை தொடங்கும் இடமான விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தை ஜானகிபுரம், கண்டமானடி, வி.அரியலூர், கொளத்தூர், வேலியம்பாக்கம், காவணிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது அங்கு நடந்து வரும் 4 வழிச்சாலை பணிகளையொட்டி, விழுப்புரம் ஜானகிபுரத்தில் மேம்பாலம் மற்றும் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜானகிபுரத்தில் இருந்த பஸ் நிறுத்தத்தை சுமார் 1½ கி.மீ. தூரம் கடந்து அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மேற்கண்ட கிராம மக்கள் செல்லும் பாதையை அடைத்து பணிகள் நடக்கிறது.

இவ்வாறு வெகுதொலைவில் பஸ் நிறுத்தத்தை அமைத்தால் கிராம பகுதிகளுக்கு பஸ்கள் மூலம் செல்வோர் பல கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்படும், எனவே ஏற்கனவே இருந்த பழைய இடத்திலேயே பஸ் நிறுத்தத்தை அமைக்க வேண்டுமென ஜானகிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையின் அருகே திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.

தாசில்தார் பேச்சுவார்த்தை

இதையடுத்து விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த 4 வழிச்சாலை பணிகள் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் நடந்து வருவதாகவும், அத்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி, பொதுமக்கள் சிரமப்படாத அளவிற்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் காலை 11 மணியளவில், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்