நபிகள் நாயகம் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நபிகள் நாயகம் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரம் மற்றும் ஆவடியில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை கூறிய பா.ஜ.க. நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை மசூதியில் இருந்து இஸ்லாமிய பெண்கள் உள்பட பல்வேறு முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக தாம்பரம் பஸ் நிலையம் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அக்கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினரும் இதில் பங்கேற்றனர். கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் தாம்பரம் பஸ் நிலையம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பா.ஜ.க. நிர்வாகிகள் நுபுர்சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரின் உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தபோது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு தாம்பரம் பஸ் நிலையத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் நேற்று மாலை ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சேக்முகமது அலி, திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் தமிழ் சாக்ரடீஸ், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நூர்முகமது, ம.ம.க. மாவட்ட செயலாளர் அஸ்காப் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.