20 சிறப்பு ரெயில்கள் இயக்கம்; கலெக்டர் தகவல்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-11-29 16:57 GMT

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கார்த்திகை தீபத்திருவிழா பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை 14 மண்டலங்கலாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெறும் அனைத்து பணிகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும். குடிநீர் வசதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகளுக்கு தேவைப்படும் தண்ணீர் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கிரிவலப்பாதையில் உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பினால் உடனடியாக அதில் உள்ள குப்பைகளை தனியாக எடுத்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்துவிட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே அன்னதானம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிரிவலப்பாதையில் தூய்மைப்பணி, குடிநீர், கழிவறை மற்றும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

மலையேற அனுமதி சீட்டு

தற்காலிக பஸ் நிலையத்தில் நெரிசல் இல்லாமல் பஸ் நிறுத்தம் செய்ய வேண்டும். தற்காலிக பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பும் அடிப்படை வசதிகளும் உரியவாறு வழங்குவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

கார் பார்க்கிங் பகுதி மற்றும் தற்காலிக கார் பார்க்கிங் நிலையத்தில் நெரிசல் இல்லாமல் கார்கள் நிறுத்தி வைக்க வேண்டும். மலையேற அனுமதி சீட்டு வழங்கும் பணி சரிபார்ப்பு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் மூலம் அனுமதி சீட்டு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் முதலில் வரும் 2,500 நபர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். அந்த டோக்கனில் அனுமதி கோரும் நபரின் பெயர், ஆதார் எண், செல்போன் எண் எழுதித்தர கோரவேண்டும், ஆதார் அட்டை அசல் கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும். சரிபார்ப்பு அலுவலர் விவரங்களை சரிபார்த்து கையொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

20 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவிற்கு எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாகவும், கூடுதல் அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அன்னதானம் வழங்குவதற்காக 101 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க 226 நபர்கள் பதிவு செய்துள்ளனர். அன்னதானம் நெறிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 101 இடங்களில் 69 தனியார் இடமும், 32 அரசு இடங்களிலும் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக 2,700 சிறப்பு பஸ்களும், 13 தற்காலிக பஸ் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாடவீதி மற்றும் கோவிலை சுற்றிலும் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் வருகிற 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது. 59 தற்காலிக கார் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையித் சுலைமான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெற்றிவேல், திருமால், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்