புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு
கடையம் அருகே புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு விழா நடந்தது.;
கடையம்:
கடையம் அருகே மந்தியூரில் முகைதீன் குத்பா பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. மந்தியூர் ஜமாத் தலைவர் முகைதீன் பாதுஷா தலைமை தாங்கினார். பள்ளிவாசல் இமாம் செய்யது அன்பியா கிராஅத் ஓதினார். செயலாளர் முகமது யூசுப் வரவேற்று பேசினார். நெல்லை ஐகிரவுண்டு முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் சையது அகமது கபீர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ரவணசமுத்திரம் ஹனபி பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது, இஸ்லாமிக் சென்டர் தலைவர் கட்டி அப்துல்காதர், செயலாளர் தென்காசி முகமது அலி, வீராசமுத்திரம் ஜமாத் நிர்வாகி மீரான் பீர் ஒலி, கல்யாணிபுரம் ஜமாத் தலைவர் அல்லாபிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீரான் முகைதீன், சமூக ஆர்வலர் விக்கிரமசிங்கபுரம் கானகத்தி மீரான், திருமலையப்பபுரம் அமீர்ஜான் நர்சிங் ஹோம் டாக்டர் அமீர்ஜான், கடையம் வட்டார ஜமாத்துல் உலமா செயலாளர் அப்துல் ஜப்பார் யூசுபி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், தனது 5 மாத ஊதியமான ரூ.10 ஆயிரத்தை பள்ளிவாசல் நிதிக்காக வழங்கினார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவி முஹைதீன் பீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.