மலையாளிகளின் திருவிழா: ஈரோட்டில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சி

மலையாளிகளின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று ஈரோட்டில் உள்ள மலையாள மக்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-08 21:46 GMT

ஈரோடு

மலையாளிகளின் திருவிழாவான ஓணம் பண்டிகை நேற்று ஈரோட்டில் உள்ள மலையாள மக்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஓணம் பண்டிகை

மலையாள மக்களின் மிக முக்கியமான திருவிழாவாக இருப்பது ஓணம் பண்டிகையாகும். கேரளாவை பண்டைய காலத்தில் ஆட்சி செய்த மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவம் அகற்ற மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து 3 அடி யாசகம் கேட்டார்.

மகாபலி சக்ரவர்த்தியும் ஒப்புதல் அளித்து 3 அடி நிலம் யாசகம் கொடுத்தார். வாமனன் முதல் அடியில் மண்ணையும், 2-ம் அடியில் வானையும் அளந்தார். 3-ம் அடியை மகாபலி சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதாள உலகத்துக்கு அனுப்பினார். அப்போது அவர் நேசிக்கும் கேரள மக்களை ஆண்டுதோறும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வரம் கேட்டார். அவரும் அதை அருளினார். அதன்படி ஆண்டுதோறும் 10 நாட்கள் மகாபலி சக்ரவர்த்தி தனது மக்களை பார்க்க வருவதாக ஐதீகம். மலையாள மக்களும் தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த 10 நாட்களையும் ஓணம் விழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஈரோட்டில் கொண்டாட்டம்

அதன்படி நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று கொண்டாடினார்கள். கேரளாவை சேர்ந்த பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், ஈரோட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலையாள மக்கள் பலரும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். நேற்று காலையிலேயே தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலங்கள் போட்டு மகிழ்ந்தனர். நண்பர்கள், அக்கம்பக்கத்தினரை தங்கள் வீடுகளுக்கு அழைத்து ஓணம் விருந்து, பாயாசம் செய்து பரிமாறினார்கள்.

செட்டிபாளையம் பகுதியில் உள்ள மலையாள மக்கள் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள். அத்தப்பூ கோலமிட்டும், கேரள பாரம்பரிய ஆடை அணிந்தும், நடனம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்