நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்
விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.
பயிற்சி கூட்டம்
நாகை நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பான பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதுநிலை மண்டல மேலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் (தரக்கட்டுப்பாடு) தியாகராஜன், கண்காணிப்பாளர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் முதுநிலை மண்டல மேலாளர் பேசியதாவது:-நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரித்த பின்னர் நுகர்பொருள் வாணிபகழகம் நாகை மண்டல அலுவலகத்துடன் இதுநாள் வரை இயங்கி வந்தது. தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என தனியாக மண்டல அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மயிலாடுதுறை தனி மண்டலமாக செயல்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு கரீப் பருவத்திற்கான கொள்முதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நாகை மாவட்டத்தில் நடப்பு குறுவை நெல் கொள்முதல் செய்ய 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நாகை மண்டலம் சார்பில் கடந்த 7-ந்தேதி முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பொறக்குடி, திருப்புகளூர், மாதிரிமங்கலம், அம்பல், கணபதிபுரம், சீயாத்தமங்கை, மருங்கூர், திருமருகல், ஈசனூர் ஆகிய 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் நெல்லை பட்டியல் எழுத்தர் கொள்முதல் செய்ய வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கொள்முதல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் புகார்களுக்கு இடம் அளிக்காமல் பணியாற்ற வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசின் உத்தரவின் படி ஏ கிரேடு நெல் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ. 2160-க்கும், சி கிரோடு நெல் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.2115-க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்திற்கு சென்று ஆன்லைன் வாயிலாக முன் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் குறிப்பிடப்படும் தேதியில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கையூட்டு பெற கூடாது. இதில் உதவி மேலாளர் (கொள்முதல்) ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.