உயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்
தமிழ்நாட்டில் 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை எப்போது விதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.
அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் இனிய உயிர்களை இழந்து போகிறார்கள்.
சூதாட்ட விளையாட்டுகள்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.
இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.
தொடரும் தற்கொலைகள்
கடந்த வாரத்தில்கூட மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு என்பவரும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதுவரை தமிழ்நாட்டில் 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசையை தூண்டி, விளையாட வைத்து, பணத்தை இழப்பதோடு, உயிரை மாய்க்க வைக்கும் இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொது மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமே இருக்கின்றன.
தடை சட்ட மசோதா
அரசும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை சென்னை ஐகோர்ட்டு வாயிலாக சூதாட்ட நிறுவனங்கள் உடைத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் மீண்டும் இதற்கான தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரை அளித்தது.
அதனை அடிப்படையாக கொண்டு, பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். பின்னர், தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒப்புதல் எப்போது?
இந்த புதிய சட்டப்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 3 மாத சிறை தண்டனையும், அந்த சூதாட்ட நிறுவனத்தின் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அரசு தரப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கவர்னரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு விரைந்து கவர்னர் ஒப்புதல் கொடுத்து, சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விழிப்புணர்வு அவசியம்
இதுெதாடர்பாக மருத்தவ மனநல ஆலோசகர் டாக்டர் வந்தனா கூறும்போது, 'சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனதளவில் சோர்வடைபவர்களின் கடைசி கட்டம்தான் தற்கொலை. அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகர்களை அணுகுவது அவசியம். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பதை பார்த்து அதற்கேற்றபடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
மருந்து, மாத்திரைகளினால் சிலரையும், ஆலோசனைகள் மூலம் சிலரையும் சூதாட்ட அடிமையில் இருந்து வெளியில் கொண்டுவரலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான முழு முயற்சிகளை அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும். இந்த வகை சூதாட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை எளிதில் அணுக முடியும் என்பதால், பெண்களும் இதில் அதிகம் விளையாடுகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர்தான் ஈடுபடுகிறார்கள். சூதாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதைவிட, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதை ஆராய வேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமான ஒன்று' என்றார்.
இளைஞர்களின் எதிர்காலம்
வக்கீல் ஸ்ரீதேவிபாலாம்பாள் (பழனி) :- ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி விட்டனர். ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணம், நேரத்தை இழந்து இறுதியில் தங்களுடைய வாழக்கையையும் பறிகொடுத்து விடுகின்றனர். சூதாட்டத்தில் அதிக பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆசையில் பலர் சரியாக வேலைக்கு கூட செல்வது இல்லை. அதை மீறி வேலைக்கு சென்றால் சம்பளத்தை வீட்டில் கொடுக்காமல் சூதாடுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் பொருளாதாரரீதியாக பின்தங்கி இருக்கிறது. பல குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதால் இளைஞர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். அதன்மூலம் நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூக ஆர்வலர் குணசேகரன் (தி.வடுகபட்டி) :- சூதாட்டத்தால் நாடு, மக்களை இழந்த கதையை மகாபாரதம் நமக்கு விளக்கி இருக்கிறது. எனவே சூதாட்டத்தால் ஏற்படும் இழப்பை பற்றி அனைவரும் அறிவோம். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்டங்கள் அனைத்தையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இந்த சூதாட்டம் மூலம் அரசுக்கு பல கோடி வரி கிடைப்பதை கவனத்தில் கொள்ள தேவையில்லை. அரசின் வருவாயை விட மக்களின் உயிரே மேலானது. எனவே தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.
குடும்பங்களை காப்பாற்றுங்கள்
குடும்ப தலைவி கண்ணகி (சிறுகுடி) :- இளைஞர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதால் குடும்பத்தினர் உள்பட யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை பயன்படுத்தி குடும்பத்தினருக்கு தெரியாமல், சூதாடுகின்றனர். இதனால் சம்பளத்தை இழப்பதோடு, கடன் வாங்கி அதையும் சூதாட்டத்தில் போடுகின்றனர். தொடக்கத்தில் சிறு, சிறு தொகை கிடைப்பதால் ஆர்வத்தில் அதிக தொகையை கட்டி விளையாடுகின்றனர். அதில் தோல்வி அடைந்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததும் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்கின்றனர். தற்கொலை செய்தவர்கள் மட்டுமே வெளியே தெரிகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் விரக்தியில் இருக்கின்றனர். அவர்களையும், இனிமேல் சூதாட்டத்தில் ஈடுபட இருப்போதையும் மீட்பது அவசியம். அதற்கு உடனடியாக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆட்டோ டிரைவர் அய்யப்பன் (திண்டுக்கல்) :- சூதாட்டம் எந்த வடிவில் இருந்தாலும் அதை தடை செய்ய வேண்டியது அவசியம். வேலை செய்பவர்கள் மட்டுமின்றி வேலையில்லாத இளைஞர்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பல குடும்பங்கள் வறுமையில் சிக்கி தவிப்பதற்கு ஆன்லைன் சூதாட்டமும் ஒரு காரணம். ஏற்கனவே மதுவால் இளைஞர்கள் சீரழிந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டமும் வேறு பலரின் வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இதனால் இளைஞர்களின் சக்தி வீணாகிறது. அதை நல்வழியில் பயன்படுத்தினால் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். இதற்கு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதே சிறந்த வழியாக இருக்கும். நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து பல குடும்பங்களை வாழ வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.