ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்:கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.;

Update:2023-02-16 03:27 IST

ஓமலூர்:

நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி

சேலம் மேற்கு, தெற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சினையான மேட்டூர் உபரிநீர் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதன் பயனாக கடந்த ஆட்சியின் போது ரூ.550 கோடியில் திட்டம் தொடங்கப்பட்டது. இதுபோதுமானது அல்ல. சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். காலநிலை மாற்றம் மிக முக்கிய பிரச்சினையாக இருக்க போகிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பூமி வெப்பமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எனவே மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.

பா.ம.க. போராட்டம்

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை உடனே தொடங்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களை பாதிக்கும் நூல் விலை ஏற்றம் பிரச்சினையில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதல்- அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதுவரை 43 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் கவர்னர்தான். ஆன்லைன் அவசர தடை சட்டத்திற்கு அனுமதி அளித்தவர். நிரந்தர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது தெரியவில்லை. அவர், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ் ஈழம்

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். இந்த மாதம் என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். உருக்காலையை மத்திய அரசு நடத்த முடியாவிட்டால் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அதனை உலக தமிழர்கள் ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கேற்ற பணிகளை திட்டமிட்டு நடத்தி வருகிறோம். பூத் அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். கருணாநிதி மீது எங்களுக்கு அதிக மரியாதை உண்டு. அவர், நினைவிடம் அருகில் பேனா சின்னம் அமைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், முன்னாள் எம்.பி. தேவதாஸ், சேலம் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகர் (மேற்கு), செல்வகுமார் (தெற்கு), மாவட்ட தலைவர்கள் மாணிக்கம், முத்துசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்