பட்டா மாறுதலுக்கு இணையவழியாக விண்ணப்பிக்கும் வசதி: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பட்டா மாறுதலுக்காக ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற நிலஅளவை வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-23 18:56 GMT

சென்னை,

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டாமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பட்டா மாறுதலுக்காக 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற நிலஅளவு வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கூடுதல் வசதிகள்

இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது பொதுசேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமிருக்காது. பொதுமக்கள் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், பொதுசேவை மையங்களுக்கு செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.

கட்டணமின்றி பெறலாம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற நில ஆவணங்கள் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிப்படுத்தப்பட்டு, தமிழ்நிலம் (நகர்ப்புறம்) என்ற மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புற நிலவரை படங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம்.

மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொதுமக்கள், நகரநிலவரைபடம் பெரும்பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டி.ஜி. வினய், மாநில தகவலியல் அலுவலர் கே. சீனிவாசராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்