நாவல் பழம் பறிக்க வனப்பகுதிக்குள் தனியாக செல்லக்கூடாது

கோத்தகிரியில் நாவல் பழ சீசன் தொடங்கியது. எனினும் வனப்பகுதிக்குள் தனியாக நாவல் பழம் பறிக்க செல்லக்கூடாது என்றும், கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-07-01 13:32 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் நாவல் பழ சீசன் தொடங்கியது. எனினும் வனப்பகுதிக்குள் தனியாக நாவல் பழம் பறிக்க செல்லக்கூடாது என்றும், கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

நாவல் பழ சீசன்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்கள் நாவல் பழ சீசன் காலமாக உள்ளது. அதன்படி தற்போது சீசன் காரணமாக நாவல் மரங்களில் பழங்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து பலரும் வனப்பகுதிக்கு சென்று நாவல் பழங்களை பறித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ நாவல் பழம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களுக்கு நாவல் பழம் சிறந்த மருந்ததாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

அதிக இனிப்பு சுவை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும், மற்ற நாவல் பழங்களை காட்டிலும் அதிக இனிப்பு சுவை கொண்டதாக உள்ளன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. நீரிழிவு நோயாளிகள் நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் நாவல் பழங்களை பலரும் விரும்புகின்றனர் என்றனர்.

இதற்கிடையில் சீசன் காரணமாக நாவல் மரங்களை நோக்கி கரடிகள் படையெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் பழங்களை பறிக்க வரும் பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவர்களை வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

தனியாக செல்லக்கூடாது

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் நிலத்தடி நீரை பெருமளவில் உறிஞ்சும் கற்பூரம் மற்றும் சீகை மரங்களை அகற்றி, நாவல் உள்ளிட்ட சோலை மர நாற்றுகள் நடப்பட்டு வந்தது. இவ்வாறு நடவு செய்யப்பட மரங்களில் தற்போது சீசன் காரணமாக நாவல் பழங்கள் கொத்து, கொத்தாக பழுத்து தொங்குகின்றன.

சுவை மிகுந்தும், மருத்துவ குணம் கொண்டும் இப்பழங்கள் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவற்றை பறிக்க வனப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு பறிக்க செல்வோரில் பெரும்பாலானோர் கரடிகள் பழத்தை உண்ண வரும் என்ற ஆபத்தை உணராமல் இருக்கின்றனர். இதனால் அவர்கள் கரடிகள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். எனவே வனப்பகுதிக்குள் நாவல் பழங்களை பறிக்க செல்வோர் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தனியாக செல்லக்கூடாது. அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பழங்களை பறிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்