தியாகதுருகம் அருகே மீன் பிடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
தியாகதுருகம் அருகே மீன் பிடித்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாகதுருகம்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி இவருக்கு தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இந்தநிலையில் ராஜகுருநாதன் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதியை சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூரை சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெரியசாமி கீழே உள்ள கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து உடனிருந்த 4 பேரும் இறந்த பெரியசாமியின் உடலை முட்புதரிலும், சாலையிலும் வீசி மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன் ஆகியோரை தியாகதுருகம் போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்தனர்.