கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் - அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-03 11:50 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை, காமராஜர் சாலை, அவ்வையார் சிலை அருகில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் பனை விதைகளை விதைத்து இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் 1,076 கிலோமீட்டர் நீள கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இச்சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கியது. இதில் த.வேலுஎம்.எல்.ஏ., சமூக ஆர்வலர் வக்கீல் எம்.கண்ணன், ராணி மேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இத்திட்டத்தினை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பினர், ஒரு லட்சம் தன்னார்வலர்கள் மேற்கொள்கின்றனர். 14 கடற்கரையோர மாவட்டங்களில் 430 இடங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒரு கோடி பனை விதைகள் திட்டம் தொடங்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்