பர்கூர் மலைப்பாதையில்லாரி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
2 பேர் பலி;
பர்கூர் மலைப்பாதையில் லாரி, மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்.
நேருக்கு நேர் மோதல்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்துமரி. இவருடைய மகன் சித்தலிங்கம் (வயது 21). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று பர்கூர் அருகே உள்ள தாமரைக்கரையில் இருந்து ஊசிமலைக்கு மலைப்பாதையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியவர் என்கிற ஓசூரான் (60) என்பவரும், ஊசிமலைக்கு செல்வதாக கூறி சித்தலிங்கத்தின் மோட்டார்சைக்கிளில் ஏறிக்கொண்டார்.
பர்கூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆலமரத்து முடக்கு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
சாவு
இந்த விபத்தில் சித்தலிங்கம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஓசூரானை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். விபத்து ஏற்பட்டதும், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார். இறந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.