குமரியில் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை நடக்கிறது.

Update: 2023-01-24 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை நடக்கிறது.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தினவிழா நடைபெற இருக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த ஜீப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். விழாவில் மாவட்ட உயர் அதிகாரிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

குடியரசு தின விழாவையொட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தை தயார் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக மும்முரமாக நடந்தது. அங்கு புல் உள்ளிட்டவை வெட்டப்பட்டு சிறு சிறு மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று கொடிக்கம்பம் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

அணிவகுப்பு ஒத்திகை

மேலும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினமும் காலையில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. நேற்றும் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குடியரசு தினவிழாவில் ஆண்டுதோறும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் நேற்று 2-வது நாளாக நடந்தது.

1,200 போலீசார் பாதுகாப்பு

இதற்கிடையே குடியரசு தின விழாவையொட்டி ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடலில் ஏதேனும் மர்மப் படகு தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரெயில் நிலையம்

முக்கியமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும், மோப்ப நாய் மூலமாகவும் பார்சல்கள் மற்றும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் போலீசார் சோதனை செய்கிறார்கள். இதுபோல் கன்னியாகுமரி, குழித்துறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்