இந்து கோவில்கள் மீது அறநிலையத் துறைக்கு அக்கறையில்லை-எச்.ராஜா குற்றச்சாட்டு

இந்து கோவில்கள் மீது அறநிலையத் துறைக்கு அக்கறையில்லை என்று பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.;

Update:2023-08-09 00:44 IST

இந்து கோவில்கள் மீது அறநிலையத் துறைக்கு அக்கறையில்லை என்று பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தின் சுவர் கடந்த 5-ந்தேதி இடிந்து விழுந்துள்ளது. இதனை பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்குவாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது, பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் ஒன்று. இந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலையே இப்படி பராமரித்தால் மற்ற கோவில்களை எப்படி பராமரிப்பார்கள் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

அக்கறையில்லை

இந்து கோவில்கள் மீது இந்து சமய அறநிலையத்துறைக்கு அக்கறையில்லை. இந்துக்கள் மனது புண்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்கின்றேன் என ஒருவார்த்தையை கூட அமைச்சர் சேகர்பாபு பயன்படுத்தவில்லை. இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்று பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை பார்க்க ஏன் வரவில்லை?. இந்த கோபுரத்திற்கு பாலாலயம் செய்தும், கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் செய்ய திருப்பணிக்குழு தலைவர் அனுமதி வழங்கவில்லை. இதற்காக அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

அதிகாரம் இல்லை

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு உள்துறை கண்காணிப்பாளர்களை நியமிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. மேலும் இரண்டு ஆண்டுகளாக டிரஸ்டியும் நியமிக்கப்படவில்லை. டிரஸ்டி நியமிக்கப்படவில்லை என்றால் அன்றாட பூஜை செலவை தவிர, கோவிலில் வேறு எந்த செலவும் செய்ய முடியாது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்தும் மாநகராட்சி அனுமதியோடு தெருக்களின் கீழ் கேபிள்கள் போடும் பணி நடைபெறுகிறது. இதனை பக்தர்கள் தடுத்து நிறுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பா.ஜனதா திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்