மரக்காணத்தில் மதுவிலக்கு போலீஸ் சார்பில் ஏலம் விடப்படும் காரில் மண்டை ஓடு ஏலதாரர்கள் அதிர்ச்சி

மரக்காணத்தில் மதுவிலக்கு போலீஸ் சார்பில் ஏலம் விடப்படும் காரில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-11-09 18:45 GMT

மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழகத்துக்கு சாராயம், மதுபாட்டில்கள் கடத்தும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 23 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ என மொத்தம் 28 வாகனங்கள் ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

காருக்குள் மண்டை ஓடு

அதன்படி இந்த வாகனங்கள் நேற்று ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பதற்காக சென்னை, மதுரை, கோவை மற்றும் புதுச்சேரியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பழைய வாகன வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஏலம் எடுப்பதற்கு முன்பு மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பார்வையிட்டனர்.

அப்போது ஒரு காரின் பின் இருக்கை பகுதியில் பிளாஸ்டிக் வாளியில் மண்டை ஓடு இருந்தது. இதை பார்த்து, ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதனால் மரக்காணம் போலீஸ் நிலையம் பரபரப்பானது. இதை அறிந்த போலீசார் காரில் இருந்த மண்டை ஓட்டை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்குள் எடுத்துச் சென்றனர்.

போலீசார் விளக்கம்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு மரக்காணம் அருகே கூனிமேடு கழுவெளி பகுதியில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றி, இறந்த பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று விசாரணை நடத்தினர்.

கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு பகுப்பாய்வுக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிந்து மீண்டும் மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு மண்டை ஓடு கொண்டுவரப்பட்டது. அதை போலீஸ் நிலையத்தில் வைக்காமல் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காரில் தவறுதலாக வைத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏலம் விடப்படுவதற்காக வைத்திருந்த காரில் பெண்ணின் மண்டை ஓடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்