மணலி புதுநகர் தர்மபதி சார்பில் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் ஊர்வலம்

மணலி புதுநகர் தர்மபதி சார்பில் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-03-05 09:21 GMT

சென்னை மணலி புதுகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அய்யா வைகுண்டரின் 191-ம் ஆண்டு அவதார திருநாள் விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி பழைய வண்ணாரப்பேட்டை, தங்ககிளி திருமண மாளிகையில் இருந்து 2 குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச்செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். காலை 6 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான அய்யா வழி பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு திருநாமசெங்கொடி ஏந்தி அய்யா அரகர சிவ சிவா என பக்தி கோஷங்களை எழுப்பியும், பாடல்களை பாடிய படியும் அய்யாவின் அகில திரட்டு ஆகமத்தை சுமந்து செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வரும்போது டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் தலைவர் ஆர்.பி.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று காலை சிற்றுண்டி வழங்கினர்.

தொடர்ந்து மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக 15 கி.மீ. தூரம் கடந்து பாதயாத்திரையாக நடந்து வந்து மதியம் மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை வந்தடைந்தனர்.

அய்யாவின் பக்தர்களுக்கு ஆங்காங்கே உபயதாரர்கள் நீர், மோர் வழங்கினர். மதியம் பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது. மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல் நடைபெற்றது. இரவு வைகுண்ட ஜோதி ஏற்றப்பட்டு இனிமம் வழங்கும் நிகழ்வுடன் திருவிழா நிறைவுபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்